ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான நளினி, முருகன் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-29 11:18:24] ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான நளினி, முருகன் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனையும், அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையும் அனுபவித்து வருகிறார்கள்.
அவர்கள் 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார். அம்மனுவை கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.
இதையடுத்து, வக்கீல் கருப்பன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுதாக்கல் செய்தார். அம்மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
ராஜீவ்காந்தி கொலையின் சதி அம்சங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் தனது இறுதி அறிக்கையை 1998-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி சமர்ப்பித்தது. அதில், ராஜீவ் கொலையில் சந்திராசாமியின் பங்கு, சி.ஐ.ஏ., மொசாத் போன்ற வெளிநாட்டு உளவு அமைப்புகளின் தொடர்பு ஆகியவை குறித்தும், சந்தேகத்துக்குரிய மேலும் 21 பேரின் தொடர்பு குறித்தும் மேற்கொண்டு விசாரணை நடத்துமாறு ஜெயின் கமிஷன் சிபாரிசு செய்திருந்தது.
அதன் அடிப்படையில், 1998-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி, சி.பி.ஐ.யின் கீழ், பல்நோக்கு கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. அது, ஜெயின் கமிஷன் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தொடங்கியது.
ஆணையம் விசாரணையை தொடங்கிய தகவலை, விசாரணை கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்திருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டோரின் அப்பீல் மனுக்களை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டிலும் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அந்த தகவல்களை கோர்ட்டுக்கு தெரிவிக்காமல் சி.பி.ஐ. மறைத்ததால், நளினி, முருகன் உள்ளிட்ட 4 பேரும் தண்டிக்கப்பட்டனர்.
சந்திராசாமி மற்றும் 21 பேரின் தொடர்பு பற்றி விசாரிக்கப்படவில்லை. எனவே, குறைபாடுள்ள விசாரணையின் அடிப்படையில் தண்டிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ஏற்க மறுப்பு
இம்மனு, நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர், முகுந்தன் சர்மா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை என்று கூறி, நளினி உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய மறுத்து விட்டனர். மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள மனுதாரருக்கு அவர்கள் அனுமதி அளித்தனர்.
|